Wednesday, September 1, 2010

சொர்க்கம் நரகம்

சொர்க்கம்
நரகம் எல்லாம்
தாத்தா, பாட்டி கதையில்...
என்னை பொறுத்தவரையில்
உன் அருகாமை
சொர்க்கம்
விலகி நின்றால்
நரகம்

.......................................

நீ பயணிக்கும் பேருந்தை
பேருந்து நிலையத்தில்
பார்க்கும் பொழுதெல்லாம்
பேருந்துகளின் ராணியை போல்
தோற்றமளிக்கிறது
.......................................

வேர்க்கடலை வாங்கிய
காகிதத்தை கசக்கும் முன்
கண்டேன் ஒரு கவிதையை
என் பெயர் கொண்டவன்
எழுதியது
பாராட்டுடன் முத்தம்
பெற்ற என் முதல் கவிதை
ஞாபகத்திற்கு வந்தது
அவள் முகமோடு

.......................................

காகிதத்தை
மேலே எறிந்தேன்
நட்சத்திரமானது
கீழே விழுந்தது
பூக்களானது
கையில் பிடித்தேன்
கவிதையானது
உனக்குத் கொடுத்தேன்
கடிதமானது
நீ படித்தாய்
காதலானது
...........................

உள்ளம் கிளறினாள்
உயிர் பிழிந்தாள்
உவமை செய்தாள்
உலுக்கி எடுத்தாள்
உச்சி குளிர்வித்தாள்
உதடு சுழித்தாள்
ஊழல் முத்தம் வைத்தாள்
உ..உ..உ..உ..ஊ
...........................

பூ வைக்க தெரியாது
புடவை கட்டத்தெரியாது
முத்தம் தர முடியாது
தெரிந்த சொல்லியிருக்கிறேன்
சின்ன சின்ன பொய்களை
அவனிடம்
...........................

என் எல்லா
காதல் கவிதைகளுக்கும்
பொருந்தி போகிற தலைப்பு
உன் பெயர்
உன் காதலுக்கு மட்டும்
பொருந்தி போகிற பெயர் நான்
காதலும், காதலுமாய்
நடப்போம் கவிதைக் கோர்த்து
...........................

அடைமழைக்குப் பிந்திய
சிறு தூரலாய்
நம் ஊடலுக்கு பிந்திய
உன் சிணுங்கல்கள்

விட்டுத் தொடரும்
அடைமழையாய்
சிணுங்களைத் தொட்டு தொடரும்
நம் முத்தங்கள்
...........................

காலையில்
நீ போடும் கோலங்களின்
புள்ளிகள் தான்
இரவில் நட்சத்திரங்களாய்
பிரதிபலிக்கின்றன
...........................

உன்
கன்னம்பட்டு வழியும்
முதல் மழைத்துளியை
உள்ளங்கை ஏந்த பிடிக்கும்

மழைநின்ற மரத்தடியில்
இழை நீரை உலுக்கும்
உன் இம்சை பிடிக்கும்

மழைக்கு ஒதுங்கிய நேரத்தில்
உன் இதழ் பட்டு தெறிக்கும்
மழைத்துளி பிடிக்கும்

பிடிக்கும்...
பிடிக்கும்...
மழை பிடிக்கும்
...........................

மழையில் நனை
குடை மற
ஈரம் சேர்
துப்பட்டாவில் தலை துவட்டு
சேர்ந்து நனை
காதல் செய்
மழைக்காதல் செய்
...........................

கைக்குட்டை உதறலில்
பறக்கும் திருநீறு....
கால் கொலுசின்
ஒற்றை சலங்கை....
இரவு நேர
கொஞ்சல் குறுந்தகவல்கள்...
உன் கற்றை முடியில்
ஒரு ஒற்றை முடி...
இவைகளை போலத்தான்
சேமித்து வைத்திருக்கிறேன்
உன்னை பற்றிய எழுதிய
கவிதைகளில் நீக்கிய
வார்த்தைகளை
யும்
...........................

No comments: