Sunday, September 5, 2010

காதல் கீற்றுக்கள்

பிறந்த நாளுக்கு
எல்லோரும்
வாழ்த்துச் சொல்கிறார்கள்
நீ காதல் சொல்கிறாய்
அடிக்குறும்புக்காரி
நான் எதைக் கொண்டாட?
..........................................


ந்தியின் காதில்
ஏதோ கிசுகிசுத்துவிட்டு
போய்விட்டாய்

பாவம் நந்தி
எல்லோரிடமும்
புலம்பிக்கொண்டிருக்கிறது

அடிப்பாவி
என்னிடமே சொல்லி இருக்கலாம்
உன் காதலை
............................................

குழந்தைக்கு
பெயர் வைக்க
எழுதித்தந்த
அத்தனை பெயர்களையும்
நிராகரித்துவிட்டு

சிரித்துக்கொண்டே
ஒரு ஆணின் பெயரை
பெயரிட்டாய்

முதல் காதலில்
தோற்றவள் என தெரிந்தது

இப்படித்தான்
என்பெயரும்
இடப்பட்டு இருக்குமோ
ஏதோ ஒரு குழந்தைக்கு
.................................................


குழந்தையின்
கையசைப்பை
வேறு வேறு திசைகளில்
இருந்து ரசிக்கிறோம்

ஏதேச்சையாய்
பார்வை முட்டிக்கொள்ள

நான் குழந்தையாகினேன்
நீயும் குழந்தையாக மாறேன்

கையசைப்போம்
காதலுக்கு
..................................

Saturday, September 4, 2010

* *காதல் வாங்கினால், முத்தம் இலவசம்

குழந்தையில்
உனக்கு வைத்தது போக
மீதிப் பெயர்களை எல்லாம்
உன் தெருக் குழந்தைகளுக்கு
சூட்டிவிட்டார்கள் போல
இவ்வளவு அழகாக வளர்ந்து
நிற்கிறார்களே
................................

காதலின் தயக்கங்களை
உன் செவ்வாயில்
அடக்கி வைக்காதே
ஏதாவது ஒரு திங்களில்
வெளிப்பட்டுவிடும்
பருக்களாக
................................

ழகழகாய்
பூத்துக் கிடக்கின்றன
காதல் வார்த்தைகள்
உதடுகளில்

வந்து உதடுகளால்
உலுக்கிவிடு

இதயம் நிரம்பட்டும்
................................

ன்னை காதலித்தப் பிறகு
தலையணை நனைத்ததே இல்லை
விழிகளில் என்றாய்

பிறகு என்ன
தலையணை அணைக்கிறாயா
என்றேன்

நெற்றிச் சுருக்கி
வெட்கமாய் பார்க்கிறாய்
தலையணையாய்
மாறிப்போயிருந்தேன்
................................

ம் வாழ்க்கைப் புத்தகத்தில்
முதல் வரி நீ
இரண்டாம் வரி நான்
மீதியை
காதல் நிரப்புவோம் வா
................................

ருசக்கர வாகன
பயணத்தில்
நடுவில் புத்தகத்தடை
வைக்காதே
என் பூமிப்பந்து
விலகி விடுகிறது
உன்னிலிருந்து
................................

Thursday, September 2, 2010

# கவிதைக்காரி


விதை
வாடகைக்கு

குடியிருக்கும் பகுதி
நீ இருக்கும் மகளிர் விடுதி
.................................

ன்னைப் பற்றி
கவிதைச் சொல்ல சொன்னாய்
இரண்டு கவிதைகள் சொன்னேன்
இவ்வளவுதானா
என செல்லமாய் சிணுங்கினாய்
இன்னொரு கவிதையாய்
இருந்தது
.....................................................

பேருந்து நிழற்குடையில்
ஒழுகும் மழைத்துளியை
கையில் வாங்கி
விளையாடிக் கொண்டிருக்கிறாயா?
இல்லை
மழையை தாலாட்டிக்
கொண்டிருக்கிறாயா?
........................................

ந்தவனத்தில் இருந்து
மல்லிகைச் செடி
நகர்ந்து வருவது போலிருக்கிறது
உன் வெளியேற்றம்.

Wednesday, September 1, 2010

* காதல் சத்தங்கள்

காதல் கவிதை
எழுதுவாயா
என கேட்கிறாய்?
உன் பார்வையால்

இது வரை
இல்லை என்றேன்
என் மௌனத்தால்!

இனிமேல் எழுதுவாய்
என்றது
வீதி முனையில்
விசுக்கென்று திரும்பிய
உன் பார்வை

ஓ! இப்படியும்
காதல் சொல்லலாமா?
...................................

உன்
தலைமுறை தாண்டிய
தயக்கங்களை
உதறிவிட்டுவா!
நம்மை பிரிக்கும்
அப்பன்கள்
வரலாற்றில்
இடம் பிடிப்போம்!
...............................

தயக்கங்களை
பதுக்கி வைக்கும்
உதட்டு பள்ளத்தாக்கத்தில்
பரவி கிடக்கிறது

எனக்கான
காதல் வார்த்தைகள்

மாப்பிள்ளையை
கதவிடுக்கில் பார்க்கும்
நாணப்பெண் போல
...................................

முடிவுறா தெருக்களில்
கைகோர்த்து நடக்கும்
இணைகள்...
பேருந்து ஜன்னலோர
இருக்கையில்
தீராக் கதைகள் பேசுகிறவர்கள்...
காதலனுக்காக
மூத்திரச் சந்தில்
காத்திருக்கும் காதலி...
இரவுநேர
குறுந்தகவல் குறும்புகள்...

தலையணை அணைத்தலும், நனைத்தலும்

நன்றாகத்தான் இருக்கிறது
காதல்....

கேட்கும் போதும்
பார்க்கும் போதும்..........

சொர்க்கம் நரகம்

சொர்க்கம்
நரகம் எல்லாம்
தாத்தா, பாட்டி கதையில்...
என்னை பொறுத்தவரையில்
உன் அருகாமை
சொர்க்கம்
விலகி நின்றால்
நரகம்

.......................................

நீ பயணிக்கும் பேருந்தை
பேருந்து நிலையத்தில்
பார்க்கும் பொழுதெல்லாம்
பேருந்துகளின் ராணியை போல்
தோற்றமளிக்கிறது
.......................................

வேர்க்கடலை வாங்கிய
காகிதத்தை கசக்கும் முன்
கண்டேன் ஒரு கவிதையை
என் பெயர் கொண்டவன்
எழுதியது
பாராட்டுடன் முத்தம்
பெற்ற என் முதல் கவிதை
ஞாபகத்திற்கு வந்தது
அவள் முகமோடு

.......................................

காகிதத்தை
மேலே எறிந்தேன்
நட்சத்திரமானது
கீழே விழுந்தது
பூக்களானது
கையில் பிடித்தேன்
கவிதையானது
உனக்குத் கொடுத்தேன்
கடிதமானது
நீ படித்தாய்
காதலானது
...........................

உள்ளம் கிளறினாள்
உயிர் பிழிந்தாள்
உவமை செய்தாள்
உலுக்கி எடுத்தாள்
உச்சி குளிர்வித்தாள்
உதடு சுழித்தாள்
ஊழல் முத்தம் வைத்தாள்
உ..உ..உ..உ..ஊ
...........................

பூ வைக்க தெரியாது
புடவை கட்டத்தெரியாது
முத்தம் தர முடியாது
தெரிந்த சொல்லியிருக்கிறேன்
சின்ன சின்ன பொய்களை
அவனிடம்
...........................

என் எல்லா
காதல் கவிதைகளுக்கும்
பொருந்தி போகிற தலைப்பு
உன் பெயர்
உன் காதலுக்கு மட்டும்
பொருந்தி போகிற பெயர் நான்
காதலும், காதலுமாய்
நடப்போம் கவிதைக் கோர்த்து
...........................

அடைமழைக்குப் பிந்திய
சிறு தூரலாய்
நம் ஊடலுக்கு பிந்திய
உன் சிணுங்கல்கள்

விட்டுத் தொடரும்
அடைமழையாய்
சிணுங்களைத் தொட்டு தொடரும்
நம் முத்தங்கள்
...........................

காலையில்
நீ போடும் கோலங்களின்
புள்ளிகள் தான்
இரவில் நட்சத்திரங்களாய்
பிரதிபலிக்கின்றன
...........................

உன்
கன்னம்பட்டு வழியும்
முதல் மழைத்துளியை
உள்ளங்கை ஏந்த பிடிக்கும்

மழைநின்ற மரத்தடியில்
இழை நீரை உலுக்கும்
உன் இம்சை பிடிக்கும்

மழைக்கு ஒதுங்கிய நேரத்தில்
உன் இதழ் பட்டு தெறிக்கும்
மழைத்துளி பிடிக்கும்

பிடிக்கும்...
பிடிக்கும்...
மழை பிடிக்கும்
...........................

மழையில் நனை
குடை மற
ஈரம் சேர்
துப்பட்டாவில் தலை துவட்டு
சேர்ந்து நனை
காதல் செய்
மழைக்காதல் செய்
...........................

கைக்குட்டை உதறலில்
பறக்கும் திருநீறு....
கால் கொலுசின்
ஒற்றை சலங்கை....
இரவு நேர
கொஞ்சல் குறுந்தகவல்கள்...
உன் கற்றை முடியில்
ஒரு ஒற்றை முடி...
இவைகளை போலத்தான்
சேமித்து வைத்திருக்கிறேன்
உன்னை பற்றிய எழுதிய
கவிதைகளில் நீக்கிய
வார்த்தைகளை
யும்
...........................

Monday, August 30, 2010

* காதல் ஆராரோ

உனக்கெழுதும்
கடிதத்தில்
புள்ளி வைக்கும்போது கூட
முத்தம் வைப்பதாகவே
உணர்கிறேன்
.......................................

நம்
முத்தத்திற்கும்
சத்தத்திற்குமான
இடைவெளியில்
விழுந்து உடைகிறது
வெட்கப்பேய்
.......................................

தேவையில்லாத
பொருட்களையும்
வாங்கி வந்து குவிக்கிறேன்
உன் பெயர் பொறித்த
கடையில் இருந்து
.......................................

பட்டுப்போன மரத்தில்
பறித்து எடுத்து இருப்பார்களோ
காதலில் தோற்றவர்களின்
காகிதங்களை
.......................................

அஞ்சல் செய்யப்படாத
காதல் கடிதத்தினுள்
புகுந்த எறும்புக்கும்
தெரிந்திருக்குமோ
என்
காதலின் தயக்கங்கள்
.......................................

உன்னிடம்
என் காதல் இல்லை
என்று சொன்னபோது
வெடித்த கண்ணீர் பூக்களை
ஒரு குழந்தையைப் போல்
பெருக்கிக் கொண்டிருக்கிறது
என் காதல்
.......................................

எல்லாம்
களைந்த பிறகும்
கலையாத
உன் வெட்கத்திற்கு
என் முதல் முத்தம்
.......................................

குழந்தையின் சிரிப்பில்
உன்னையும்
அழுகையில் என்னையும்
பார்க்கிறேன்
காதல் கைக்கொட்டி சிரிக்கிறது
.......................................

இசைப்பள்ளிக்கு
விடுமுறை
என்னவள்
கொலுசு அணியவில்லை
.......................................

உன் இமைச்
சிமிட்டலின்
அழகையெல்லாம்
என்னிமைகள்
கண்ணீரால் வர்ணித்துக்
கொண்டிருக்கிறேன்
.......................................

நீ உன் கண்களால்
மட்டும்தான் பார்க்கிறாய்
நான் என் கண்ணீராலும்
உன்னைதான் பார்க்கிறேன்
.....................................
நாம் ஒன்றாய் சிரித்த சிரிப்புகள்
என் கண்களிலிருந்து
இரட்டைத்துளிகளாய்
விரிகிறது
.......................................

உன்னை விட்டு
விலகி நின்று பார்த்தால்
என் வானமெல்லாம்
கண்ணீராய் தெரிகிறது
.......................................