நீ ஒரு அழகிய முரண்பாடு
என்னிடம்
பேசும்போது மட்டும்
கண்களை விடுத்து
இதயத்தால் பார்க்கிறாய்
பேசாத போதோ
இதயம் மூடி
கண்களில் மௌனிக்கிறாய்
.............................................
உன்னோடு
பேருந்தில்
பயணிக்கும் போதெல்லாம்
மணமக்கள்
இருக்கையில்
நாம் இருப்பது போலவும்
பயணிகள் எல்லாம்
வாழ்த்த வந்தவர்கள்
போலவும் தான்
இருக்கிறது
.............................................
ஒவ்வொரு பெண்ணிடம் இருந்தும்
ஒரு கவிதையை
களவாட முடியும்தான்
என்றாலும்
உன்னிடம் மட்டும்தான்
காதலை களவாட முடிகிறது
.............................................
நீ நடக்கும் தார்ச்சாலையை
குளிப்பாட்டி மொழுகி விட
வருகிறது மழை
.............................................
நீ பேசுவதை விடவும்
மௌனம்தான் பிடிக்கிறது
மௌனம் கலைந்து வரும்
அடுத்த வார்த்தை
எனக்கானதாய் இருக்கும்
என்பதால்
உன் மௌனத்தை விடவும்
நீ பேசுவது பிடிக்கிறது
பேச்சைத் தொட்டுத் தொடரும்
மௌனத்தில்
நானிருப்பேன் என்பதால்
.............................................
உனக்கெழுதிய
காதல் கடிதங்களின்
எழுத்துகளை
உள்ளங்கையால்
தடவிப் பார்க்கிறாய்
என் சட்டை பையிலிருந்த
எழுதுகோல் இதயம் குத்தி
குதூகலிக்கிறது
.............................................
அவன் செய்த சிறந்த
கவிதை யாதெனில்
முத்தம் தருவதாக நெருங்கி
விழி மலர்த்த செய்து
முகம் மீது படர்ந்திருந்த
கற்றை முடியை
ஆட்காட்டி விரலால்
ஒதுக்கி விட்டு
ஒதுங்கி நின்றானே
அதுதான்
.............................................
2 comments:
உன்னிடம் மட்டும்தான்
இது போன்ற நல்ல கவிதைகளைக்
களவாட முடிகிறது!
hey yenna yaraiyum kathal seykiraya... un kavithai ovnrum arumai..
Post a Comment